Facebook
Instagram
Twitter

எங்களைப் பற்றி

பதிப்புத் துறையிலும், இதழியல் துறையிலும் நகரத்தார்களின் பங்கு அளப்பரியது. பதிப்பகங்கள் வாயிலாக நகரத்தார்கள் தமிழுக்கு பெருந் தொண்டாற்றி வந்தனர். நூல் வெளியீட்டைத் தொழிலாகச் செய்யாமல் தொண்டாகச் செய்தவர்கள் நகரத்தார்கள். விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய எழுச்சியை உருவாக்கிய புத்தகங்களை வெளியிட்டப் பதிப்பகங்களில் பெரும்பாலனவை நகரத்தார் நடத்தி வந்த பதிப்பகங்கள்தான்.

‘முல்லை’ பதிப்பகத்தின் நிறுவனர் முல்லை முத்தையா, ‘தமிழ்ப் பண்ணை’யின் சின்ன அண்ணாமலை, ‘பாரி நிலைய’த்தின் செல்லப்பன், ‘பழனியப்பா பிரதர்ஸ்’ பதிப்பகத்தின் நிறுவனர் பழனியப்பா செட்டியார், ஆகிய இந்த நால்வரும் இந்த ஆண்டு நூற்றாண்டைக் காண்கிறார்கள் என்பது நகரத்தார்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டிய செய்தி.

மேலும் நகரத்தார்கள் காலத்திற்கேற்ப பரிணாம வளர்ச்சியை இத்துறைகளில் கண்டு வருகிறார்கள்.

அந்தவரிசையில் மாறி வரும் இன்றைய தொழில் மற்றும் அறிவியல் வளர்ச்சியின் ஒரு பகுதியான மின்பதிப்பு துறையில் நகரத்தார்கள் நிறுவனமான "சேனா டிஜிட்டல்" தங்களது தொழில் முனைவை தமது "நாம் நகரத்தார்" என்ற சமூக இணையதள மின்னிதழ் வாயிலாக தடம் பதிக்கிறது.

உலகளாவிய நமது நகரத்தார் சமூகத்திற்கான ஒருங்கிணைந்த ஒரு பத்திரிக்கை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எங்களது விருப்பம் நமது "நாம் நகரத்தார்" மின்னிதழ் வாயிலாக இன்று கூடிவந்திருக்கிறது.

நகரத்தார் சமூக இதழ்கள் காலந்தொட்டு நம் சமூகத்தாரை இணைக்கும் பாலமாய் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் "நாம் நகரத்தார்" மின்னிதழும் இணைவதில் மகிழ்ச்சி.

வணிகம் ஒன்றையே தங்களது வாழ்வியல் வழக்கமாக கொண்டவர்கள் நன் மக்களான நம் நகரத்தார்கள்.

இன்று பதிப்புத்துறை, இதழியல், அறிவியல், பொறியியல், மருத்துவம், மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, நீதி பரிபாலனம், அரசியல், நிதியியல், ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளிலும் தங்கள் வெற்றி முத்திரைகளை பதித்து வெற்றியாளர்களாக வலம் வருகிறர்கள்.

நாம், நம்மையும், நம் சமூகத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இவ்விதழை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் எண்ணம். இந்த மின்னிதழின் நோக்கமே, நமது பலதுறை நிபுணத்துவத்தை சமுகத்தில் உள்ள அனைவரும் பயன் பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே.

மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பணிகள், நிகழ்வுகள், என பன்முகப் பகிர்வாய் இந்த மலர் மிளிர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

வாசகர்களே ஆசிரியர்களாய் இம்மின்னிதழ், நம் அனைவரையும் இணைப்பதாய், ஒருவருக்கொருவர் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும், நம் எழுத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், பரிமாறிக் கொள்ளவும் ஒரு பாலமாய் திகழும்.

எண்ணங்களை எழுத்தில் வடிப்பதென்பது ஒரு கலை! அந்தக் கலையைப் பயின்று திறன் பெற, நமது "நாம் நகரத்தார்" ஒரு நல்ல தளம் என்றே கருதுகிறோம்.

"நம்மால் நமக்காக" என்கின்ற எங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் முதல் அடியை இந்த மின்னிதழின் மூலம் நாங்கள் எடுத்து வைத்துள்ளோம் என்றெண்ணுகிறோம்.

இந்த இதழ் நம் நகரத்தார் சமூகக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும், படிப்பவர்கள் பல்துறை செய்திகளை படித்து பயனுறும் வகையிலும் அமையும் என்றும் நம்புகிறோம்.

"இது நமது பத்திரிக்கை, நம் எண்ண வெளிப்பாடு" என்று நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இந்த இதழ் அனைவரும் தங்கள் கைபேசி வாயிலாகவும், இணைய வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து எளிதில் படிக்கும் வகையில் மின்னிதழாக வடிவமைக்க பட்டுள்ளது.

எங்கள் முயற்சியில் பங்கு கொண்டு, தங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள இருக்கும் வாசக ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துகள்..!!!

நாம் நகரத்தார்..!! ஒன்றிணைவோம் வாருங்கள்..!! இது நம்மால் நமக்காக..!!!

ஆசிரியர் குழு,
நாம் நகரத்தார்
சமூக இணையதள மின்னிதழ்