வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை, பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் ஒரு ஞானி அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம் கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை கேட்டது.
"கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார்.
தன் குருவை அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று குரு பதில் கூறினார்.
இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே என்றெண்ணிய ஞானி "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா" என்று குருவை பணிந்து வேண்டினார்.
குருவும் மனமிரங்கி ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நன்மை விளையும் என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார். அனைத்தும் நன்மைக்கே ... அனைத்திற்கும் நன்றி...!! என்பதுவே அந்த மாமந்திரம்.
குரு கற்பித்த மந்திரத்தை ஞானியும் அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த ஞானி அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார்.
அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன. அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது.
குருவிற்கு மகா ஆச்சர்யம். ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென குரு கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் குருவை பார்க்கச் சென்றார்.
குருவிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். ஏழு பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது உண்மைதான். ஆனால் அனைத்தும் நன்மைக்கே, அனைத்திற்கும் நன்றி..! என்ற மந்திரத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி கூறியதால் நிலைமை மாறியது.
பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது.
வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது.
சூழல் எதுவாயினும் நம்பிக்கையுடன் சொன்னது.
எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது என்று பதில் கூறினார்.
ஞானியும் தன் சிந்தனையிலும், உணர்விலும், வாழ்வை நோக்கும் கோணத்திலும், வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்தது.
ஞானி அந்த மாமந்திரத்தை தன் வாழ்வில் உபயோகிக்க ஆரம்பித்தார் சந்திக்கும் எல்லா சூழல்களிலும்
அனைத்தும் நன்மைக்கே, அனைத்திற்கும் நன்றி...!!
என்று உளமார கூற ஆரம்பித்தார்.
அதுவரை அவர் பார்த்திராத கோணத்தில் பார்க்க அந்த மந்திரம் உதவியது.