கோவில் சார்ந்த குடிகள், குடிகளை தழுவிய கோவில்கள் என தமிழ் சமுதாய மரபில் வந்த சமூகம் நகரத்தார் சமூகம் . நகரத்தாருக்குரிய அடையாளமாக விளங்குவது இந்த ஒன்பது நகரக்கோயில்களே .பாண்டியநாட்டில் இளையாற்றங்குடியில் வசித்த "ஏழு வழி வைசியர்" என்கின்ற நகரத்தார்கள் தங்களிடையே தோன்றிய கருத்து வேற்றுமை காரணமாக தங்களுக்கு தனித்தனி கோவிலும் , ஊரும் வேண்டுமென எண்ணினார் .இதன் மேற்கொண்டு பாண்டிய அரசன் சௌந்திர பாண்டியனை சந்தித்து தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர் .அரசனும் ஏழு வழி நகரத்தார்களின் வேண்டுகோளை நிறைவேற்றி ஆவண செய்தான் . அதன்படி ஏழு கோவில்கள் ஆயிற்று . பின்னர் இளையாற்றங்குடி கோவிலை சேர்ந்த திருவேட்புடையார் பிரிவினர் இரு பிரிவாக பிரிந்ததால் ஒன்பது கோவில் ஆயிற்று .
நகரத்தார்கள் யாவரும் இந்த ஒன்பது கோவிலைச் சார்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. இந்த நகரக் கோவில்களைப் பற்றிய சிறு தொகுப்பை இங்கு காண்போம்.
நகரத்தார்களின் முதல் கோயில் இது. இக்கோயில் பாண்டிய மன்னனால் கி.பி 707 இல் நகரத்தார்க்கு வழங்கப் பெற்றது. காரைக்குடியிலிருந்து 25 கி.மீ தொலைவில் கீழச்சிவல்பட்டி வழியாக ஆவணிப்பட்டி செல்லும் சாலையில் உள்ளது. அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் அனைவரும், இந்தத் தலத்தில் வந்து தங்கினர். இங்கு மன நிம்மதி கிடைத்ததால், மணல் லிங்கம் அமைத்து வழிபட்டனர். தேவர்களின் இளைப்பை ஆற்றியதால் இளைப்பாற்றுக் குடி என்று பெயர் கொண்டு பின்னாளில் இளையாத்தங்குடி என பெயர் பெற்றதாக தல புரங்கள் கூறுகின்றன. இக்கோயில் நகரத்தார் 7 உட்ப்பிரிவுக்களாக உள்ளனர். அவை முறையே ஒக்கூருடையார், பட்டிணசாமியார், பெருமருதூருடையார், கழனிவாசக்குடியார், கிங்கிணிக் கூருடையார், பேரசெந்தூருடையார், சிறு சேத்தூருடையார் ஆகியனவாகும். இந்த ஏழு உட்பிரிவினரும் சமூக உறவுமுறைகளில் தனித்தனி கோயில் போல நடந்து கொள்வர்.
கி.பி. 712இல் பாண்டிய மன்னனால் நகரத்தார்களுக்கு வழங்கப்பட்ட கோவில் இது. காரைக்குடியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.கொங்கணச் சித்தர் இரச-வாதத்தால் உருவாக்கிய தங்கத்தின் மாற்று உரைத்துப் பார்த்த ஊர் என்பதால் மாற்றூர் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலைச் சார்ந்த நகரத்தார்கள் உறையூருடையார், அரும்பாக் கூருடையார், மணலூருடையார், மண்ணூருடையார், கண்ணூருடையார், கருப்பூருடையார், குளத்தூருடையார் என்ற 7 பிரிவுகளாக உள்ளனர். இளையாத்தங்குடி நகரத்தார்களை போன்றே இவர்களும் சமூக உறவுமுறைகளில் தனித்தனி கோயில் போல நடந்து கொள்வர்.
கி.பி. 714 இல் பாண்டிய மன்னனால் நகரத்தார்களுக்கு வழங்கப்பட்ட கோவில் இது. காரைக்குடியில் இருந்து கிழக்கே மாத்தூர் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தனபதி என்ற நகரத்தார் கனவில் தோன்றிய சிவபெருமான், சூடாமணி ஒன்றை வழங்கி, சிவ வழிபாட்டை தொடங்கும்படி பணித்த தலம் இது.இக்கோவில் நகரத்தார் சூடாமணிபுரமுடையார் எனப்படுகின்றனர்.இலுப்பை மரங்கள் இப்பகுதியில் நிறைந்திருமையால் இவ்வூர் இலுப்பைக்குடி என பெயர் பெற்றது.
காரைக்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக 14 கி.மீ தொலைவில் உள்ள குடைவரைக் கோவில் பிள்ளையார்பட்டி. நந்திராசனால் பிரதிட்டை செய்யப்பெற்றது இக்கோவிலை, 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனிடமிருந்து இளையாற்றங்குடியிலிருந்து பிரித்து வந்த, திருவேட்பூருடையார் என்ற சகோதரர்களில் இளைய சகோதரர்கள் இக்கோயிலை தங்களுக்குரிய தனிக் கோவிலாக்கிக் கொண்டனர்.
பார் புகழும் கற்பக விநாயகர் இத் திருக்கோவிலில், இரண்டு திருக்கரங்கள் கொண்டு வலம்புரி விநாயகராக வடக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். மேலும் இவர் தனது வலக் கையில் சிவலிங்கத்தை ஏந்தி பூசை செய்யும் அமைப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.
இக்கோவில் நகரத்தார் திருவேட்பூருடையார் என்ற பிரிவைச் சார்ந்தவர்கள். இன்றும் இக்கோவிலைச் சார்ந்த நகரத்தார் முதலில் இங்கு திருமணத்திற்குப் பாக்கு வைத்து, பின் இளையாற்றங்குடியிலும் பாக்கு வைத்து கோவில் மாலை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களின் மூத்த வழியினரான இரணிக்கோயிலாரை சகோதர உறவுடையர்களாக கருதுவதால் அவர்களோடு திருமண உறவுகள் கொள்வதில்லை.
வளவேந்திர ராசனால் பிரதிட்சை செய்யப்பெற்ற இக்கோயில், காரைக்குடியில் இருந்து குன்றக்குடி வழியாக 15 கி.மீ. தொலைவில் வைரவன் பட்டியில் உள்ளது.இக்கோயிலை கி.பி. 712 இல் பாண்டிய மன்னரிடமிருந்து நகரத்தார்கள் பெற்றனர். இக்கோயிலில் வைரவர் வழிபாடு சிறப்பு பெறுவதால் இக்கோயில் வைரவன் கோயில் எனவும் தீர்த்தம் வைரவ தீர்த்தம் என்றும் அழைக்க படுகிறது. இக்கோயிலை சார்ந்த நகரத்தார்கள் சிறுகுளத்தூருடையார், கழனிவாசலுடையார், மருதேந்திரபுமுடையார் என மூன்று பிரிவுகளை சார்ந்தவர்களாவர். இவர்கள் பிரிவு மாற்றித் திருமணம் செய்யும் வழக்கமில்லை. இவற்றுள் சிறு குளத்தூருடையர் என்னும் பிரிவு பெரிய வகுப்பு, தெய்யனார் வகுப்பு, பிள்ளையார் வகுப்பு என மூன்று உட்ப்பிரிவு களை கொண்டுள்ளது.
நேமராசனால் பிரதிட்சை செய்யப் பெற்ற இக்கோயில் , காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவில் குன்றக்குடி, கீழசிவப்பட்டி சாலையில் உள்ளது .கி.பி. 714 இல் செளந்தர பாண்டியனால் இக்கோயில் நகரத்தாருக்கு வழங்கப்பெற்றது. செட்டிநாட்டுப் பகுதியில் கிடைக்காதகிய அறிய வெள்ளைக் கற்களைத் தருவித்து இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
நியமம் என்ற பெயரே நேமம் என்று மருவியது . நியமம் என்றால் தீது அகற்றுதல் , ஒழுக்கம் பேணுதல் என்ற பொருளும் , வணிகர் குழு என்ற பொருளும் உண்டு. வணிகர் குழுவுக்கு அரசால் அளிக்கப்பட்டதால் நியமங்கோவில் எனப் பெயர் பெற்றது .இந்த ஊருக்கு நந்திபுரம், மதுநதிபுரம், ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற பெயா்களும் உண்டு.
கி.பி. 718 இல் நகரத்தாருக்கு வழங்கப்பெற்ற இக்கோயில் ,காரைக்குடியில் கழனிவாசல் வழியாக காணடுகாத்தான் சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. சூரை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் இக்கோயில் இப்பெயர் பெற்றது .பழமை வாய்ந்த இந்த ஆலயம், நான்கு நிலை கொண்ட சிறிய கோபுரத்துடன் கம்பீரம் காட்டு கிறது.மதுரை மீனாட்சிக்கு அமைந்தது போல, இங்கு அம்மன் நான்கு , திருக்கரங்களுடன், மூன்று கண்களுடனும் காட்சி தந்து அருள் பாலிக்கிறாள்.
கி.பி 714 இல் காருண்ய பாண்டிய அரசனால் பிரதிட்டை செய்யப் பெற்ற இக்கோவில், காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி வைரவன்பட்டி வழியாக விராமதி செல்லும் சாலையின் இடதுபுறம் பிரியும் கிளைச்சாலையில் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இரணியனைக் கொன்ற பாவம் நீங்க நரசிம்ம பெருமாள் வழிபட்ட தலம் இது எனக் கூறுவர். இக்கோவிலின் சிற்பவேலைபாடுகள் இக்கோவிலை “செட்டிநாட்டின் சிற்பக் களஞ்சியம்” என அழைக்கும் அளவிற்கு மனதை கவரும் வகையில் அமைந்திருக்கும்.
இக்கோவில் நகரத்தார் திருவேட்பூருடையார் என்ற பிரிவைச் சார்ந்தவர்கள். இன்றும் இக்கோவிலைச் சார்ந்த நகரத்தார் முதலில் இங்கு திருமணத்திற்குப் பாக்கு வைத்து, பின் இளையாற்றங்குடியிலும் பாக்கு வைத்து கோவில் மாலை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களின் இளைய வழியினரான பிள்ளையார் பட்டி கோயிலாரை சகோதர உறவுடையர்களாக கருதுவதால் அவர்களோடு திருமண உறவுகள் கொள்வதில்லை.
கி.பி.718 இல் பாண்டிய மன்னனால் இக்கோவில் நகரத்தார்களுக்கு கொடுக்கபட்டது. நகரத்தார் கோவில்களில் புள்ளிகளில் மிகக் குறைவாய் உள்ள கோவில் இது.காரைக்குடியிலிருந்து பள்ளத்தூர் செல்லும் வழியில் 9 கி.மீ தொலைவில் வேலங்குடி உள்ளது. வேலமரங்கள் மிகுதியாக இருந்ததால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இக்கோயில் சார்ந்த நகரத்தார் கருங்குளம், காரைக்குடி, தேவகோட்டை, பட்டமங்களம் ஆகிய ஊர்களில் வசிக்கின்றனர்.